ஜார்ஜ்டவுன், ஜனவரி.31-
பினாங்கு மாநிலத்தில் Zakat நிதி மூலம் நிலம் வாங்கிய விவகாரத்தில், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஒரு மூத்த அரசு அதிகாரி மீதான விசாரணையை ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் பினாங்கு மாநில அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும், தற்போதைக்கு உள்விசாரணை நடத்தப்படாது என்றும் முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், அப்போது அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இருந்ததாகவும் முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் சுட்டிக் காட்டினார்.
இருப்பினும், ஒரு சட்டமன்ற உறுப்பினரின் புகாரைத் தொடர்ந்து எஸ்பிஆர்எம் தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்குச் சென்ற அதிகாரிகள், நிலம் வாங்கியது தொடர்பான முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதோடு, விசாரணை முடியும் வரை மாநில அரசு இதில் தலையிடாது என்றும் சாவ் கோன் இயோவ் உறுதிப்படத் தெரிவித்தார்.








