ஜார்ஜ்டவுன், ஜனவரி.31-
பினாங்கு கடல் பகுதியில் சட்டவிரோதமாகக் கச்சா எண்ணெயைப் பரிமாற்றம் செய்ய முயன்ற இரண்டு பிரமாண்ட எண்ணெய் டேங்கர் கப்பல்களை மலேசியக் கடல்சார் அமலாக்க முகமை அதிரடியாகத் தடுத்து வைத்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது சுமார் 512 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கச்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கப்பல்களின் மொத்த மதிப்பு 718 மில்லியன் ரிங்கிட் என கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில், முக்கா ஹெட் (Muka Head) பகுதிக்கு மேற்கே 24 கடல் மைல் தொலைவில் இந்தக் கப்பல்கள் சந்தேகத்திற்குரிய வகையில் நங்கூரமிட்டிருந்தன. அப்போது ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெய் மாற்றப்படுவது கண்டறியப்பட்டது. அந்தக் கப்பல்களில் பணியாற்றிய சீனா, மியன்மார், ஈரான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 53 சிப்பந்திகள் கைது செய்யப்பட்டுள்ளனர் கடல் சார் முகமை இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








