கோலாலம்பூர், டிசம்பர்.28-
'மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு 2026' திட்டத்தின் மாபெரும் தொடக்க விழாவான 'I LITE U' விழாவை முன்னிட்டு, கோலாலம்பூரின் இதயப் பகுதியான புக்கிட் பிந்தாங் சாலைகள் வரும் ஜனவரி 1 ஆம் தேதியும் 3 ஆம் தேதியும் தற்காலிகமாக மூடப்படுகின்றன. பிரதமர் அன்வார் இப்ராஹிமும், ஆஸ்கார் விருது வென்ற மிஷெல் இயோவும் பங்கேற்கும் இந்த மெகா நிகழ்ச்சியில், 20 கலைக்குழுக்களின் கண்கவர் கலாச்சாரப் பேரணி பவிலியன் முதல் ஹோட்டல் ஃபெடரல் வரை சுமார் 900 மீட்டர் தூரத்திற்கு அரங்கேறவுள்ளது.
ஜனவரி 1-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஒத்திகைக்காகவும், ஜனவரி 3-ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் அதிகாரப்பூர்வ விழாவுக்காகவும் ஜாலான் புக்கிட் பிந்தாங், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் ஆகிய முக்கியக் சாலைகள் முழுமையாக முடக்கப்படும் என கோலாலம்பூர் காவற்படையின் போக்குவரத்து புலனாய்வு, செயலாக்கப் பிரிவின் தலைவர் உதவி ஆணையர் முஹமட் ஸாம்ஸுரி முஹமட் இசா அறிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து வரும் இந்த ஒளி மிகுந்த திருவிழாவால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கொண்டாட்டத்தைக் காணத் தயாராகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.








