ஈப்போ, ஆகஸ்ட்.16-
கடந்த புதன்கிழமை, பேரா, பாகான் செராய் அருகில் தாமான் செலின்சிங் முன்புறம், ஜாலான் ஈப்போ-பட்டர்வொர்த் சாலையின் 94 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தில் போலீஸ்காரர் ஒருவரை மோதித் தள்ளி மரணம் விளைவித்ததாகச் சந்தேகிக்கப்படும் லோரி ஓட்டுநர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வர்த்தகரான 64 வயது லோரி ஓட்டுநர், பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து பாகான் செராயில் உள்ள அவரின் வீட்டில் நேற்று மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கெரியான் மாவட்ட போலீஸ் தலைவர் ஜஃப்ரி முகமட் ஸையின் தெரிவித்தார்.
எந்தவொரு குற்றப்பதிவையும் கொண்டிருக்காத அந்த லோரி ஓட்டுநர், போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாகான் செராய் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 23 வயது கான்ஸ்டபல் ஹகிம் டானியல் ருஹிமா லோரியினால் மோதப்பட்டு கடும் காயங்களுக்கு ஆளாகினார். அவர் தைப்பிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக ஜஃப்ரி முகமட் ஸையின் கூறினார்.








