ஷா ஆலாம், நவ. 6-
ஷா ஆலாம், தாமான் ஸ்ரீ மூடா இடைநிலைப்பள்ளியில் 2024 ஆம் ஆண்டுக்கான தீபாவளி திருநாளையொட்டிய “ உங்கள் தீபாவளியை வண்ணமயமாக்குங்கள் எனும் மாபெரும் நிகழ்வு, பள்ளி அளவில் கடந்த அக்டோபார் 24 ஆம் தேதி வெகுசிறப்பாக நடைபெற்றது.
பள்ளியின் ஆன்மீக மற்றும் நற்பண்புகளுக்கான நடவடிக்கைக் குழுவினாரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தீபாவளி நிகழ்வு, பள்ளியின் முதல்வர் இஞ்சே அகமட் ஸைம் பின் முகமட், பள்ளி மாணவர் நலப்பிரிவு பொறுப்பாசிரியர் திருமதி ராஜேஸ், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு. அலெக்சண்டர் தோமஸ்s முன்னிலையில் பள்ளியைச் சேர்ந்த இந்திய ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

மாணவர்கள் மத்தியில் தீபாவளி திருநாளைப் பற்றிய மகத்துவத்தை உணர்த்தும் அதேவேளையில் மாணவர்களிடையே ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் விதைக்கும் இலக்குடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளியைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் பெருவாரியாக கலந்து சிறப்பித்தனர்.
தீபாவளி திருநாளின் குதூகலத்தை வசதிகுறைந்தவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பரிவுமிக்க மாணவர் சமுதாயத்தை உருவாக்குதல், பள்ளி நிர்வாகத்துடன் அணுக்கமான உறவை வைத்துக்கொள்வதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையில் நல்லுறவை மலரச் செய்தல் ஆகிய நோக்கங்களுக்காக “உங்கள் தீபாவளியை வண்ணமயமாக்குங்கள்” எனும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.

இதற்கு மேலாக பாரம்பரியத்தையும், சமய நம்பிக்கையையும் நிலைநிறுத்திக்கொள்வதற்கான முக்கியத்துவத்துவத்தின் அவசியத்தை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வலியுறுத்தும் நிகழ்வாகவும் இது கட்டமைக்கப்பட்டு இருந்தது.
இத்தீபாவளி நிகழ்வு சிறக்க, மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்கனவே பல்வேறு பாரம்பரிய போட்டிகளும் நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.
இந்தியர்களின் பாரம்பரிய உணவு முறையில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களுடன் பழங்கஞ்சியை மண்பாண்டத்தில் காட்சிக்கு வைத்தல், கொட்டாங்கச்சி மூலம் தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருளில் தீபாவளி பின்னணியில் ஓவியங்கள் வரைதல், தீபாவளி வாழ்த்து அட்டை தயாரித்தல், தீபாவளி அன்பளிப்பு உறைகளை தயாரித்தல் உள்ளிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளி அளவில் நடத்தப்பட்ட ஒற்றுமை விழாவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மணவர்களுக்கு இந்த தீபாவளி நிகழ்வில் பரிசுகள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டனர்.
பள்ளி மாணவன் கிஷ்வனின் தனித்துவமான கைவண்ணத்தில் உருவான மிக அழகிய, நேர்த்தியான மேடை அலங்கரிப்பு, பார்வையாளர்களின் மிகுந்த கவன ஈர்ப்பாக அமைந்தது.
நிகழ்விற்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் பள்ளியைச் சேர்ந்த இலக்குக்கு உரிய 150 மாணவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது.

இந்த தீபாவளி நிகழ்வு, எல்லா நிலைகளிலும் மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு நன்கொடை அளித்து, தங்களின் உணர்வுப்பூர்வமான பங்களிப்பையும், ஆதரவையும் வெளிப்படுத்திய பள்ளியின் பெற்றோர் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினர், தங்களின் உளமார்ந்த நன்றியை மகிழ்வுடன் பதிவு செய்தனர்.








