ஷா ஆலாம், அக்டோபர்.24-
பெண் விவகாரம் தொடர்பில் ஷா ஆலாம், பண்டார் செத்தியா ஆலாம், ஜாலான் செத்தியாவில் நேற்று நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் மூவரைக் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவர் தேடப்பட்டு வருவதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
பிற்பகல் 3.51 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் மொத்தம் நான்கு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பொது இடத்தில் நிகழ்ந்த இந்த கைகலப்பை, அங்கு குழுமியிருந்த மக்கள், தங்கள் கைபேசி கேமராவில் பதிவு செய்து இருப்பதையும் ஏசிபி முகமட் இக்பால் சுட்டிக் காட்டினார்.
இந்த கைகலப்பு தொடர்பில் கிடைக்கப் பெற்றத் தகவலை அடிப்படையாகக் கொண்டு, அன்றிரவே நடத்தப்பட்ட சோதனையில் 69 மற்றும் 44 வயதுடைய இரண்டு நபர்கள், ஷா ஆலாம் போலீஸ் நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டனர். 22 வயதுடைய மேலும் ஒரு நபர், கிள்ளான், தாமான் காப்பாரில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சண்டைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 36 அங்குலம் நீளம் கொண்ட மரக்கட்டை ஒன்றை போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் கூறினார்.








