சிரம்பான், ஜனவரி.21-
பண்டார் பாரு நீலாயிலுள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த நகைக்கடை ஒன்றில், ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்ட இரு ஆடவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 8.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்துள்ளார்.
நீல நிற யமாஹா Y15 மோட்டார் சைக்கிளில் வந்த அந்த இரண்டு சந்தேக நபர்களும், தங்களது முகங்களை மூடியிருந்ததாகவும், தலைக்கவசங்கள் அணிந்திருந்ததாகவும் ஜொஹாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இக்கொள்ளைச் சம்பவத்தின் போது, துப்பாக்கி வைத்திருந்த அவர்கள் அதனைப் பயன்படுத்தவில்லை என்றும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதே வேளையில், ஆரஞ்சு நிற லாலாமூவ் விநியோக பைகளைப் பயன்படுத்திய கொள்ளையர்கள், 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஜொஹாரி தெரிவித்துள்ளார்.








