மலேசியர்கள் வேலை செய்யத் தயாராகவே உள்ளனர் என்றும், ஆனால் வழங்கப்படும் ஊதியம் அந்த வேலைக்கு போதுமான பொருளாதார மதிப்பை வழங்குகிறதா? என்பதை முதலாளிகள் சிந்திக்க வேண்டும் என்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜோஹாரி அப்துல் கானி தெரிவித்துள்ளார்.
1,700 ரிங்கிட் ஊதியம் வழங்கப்படும் ஒரு வேலை மலேசியர்களை ஈர்க்குமா என கேள்வி எழுப்பிய அவர், அதிக ஊதியம் கிடைத்தால் மலேசியர்கள் நீண்ட தூரம் பயணிக்கவும் தயாராக உள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை 2026 வோய்சஸ் ஒஃப் ஹேர் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கு தினமும் பயணம் செய்து அங்கு பணி புரியும் மலேசியர்களை இதற்கு உதாரணமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிலர் குடும்பப் பொறுப்புகளை நிர்வகிக்க வசதியாகவும், உடனடி வருமானத்துக்காகவும் இ-ஹெய்லிங் போன்ற கிக் (gig) வேலைகளைத் தேர்வு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, முதலாளிகள் தொழிலாளர்களின் கல்வி, தகுதி மற்றும் குடும்பப் பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியா வெளிநாட்டு தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு தொழிலாளர்கள் முக்கியமாக அழுக்கு, ஆபத்தான மற்றும் கடினமான 3D வேலைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தானியக்கமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு தொழிலாளர் சார்பைக் குறைக்க முடியும் என்றும் அவர் விவரித்துள்ளார்.








