கோலாலம்பூர், நவம்பர்.09-
உள்ளூர் தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைத் தடுக்கவும், உயர்திறன் கொண்ட உள்நாட்டு மனிதவளத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் அரசு தனது அணுகுமுறையை கண்டிப்புடன் பலப்படுத்தவுள்ளதாக தோட்டத் தொழில், மூலப் பொருட்கள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கனி அறிவித்துள்ளார். புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கும் போது, உள்ளூர் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.
உள்ளூர் தொழிலாளர்கள் கிடைக்காவிட்டால், தேசிய தொழில்திறன் பயிற்சி மன்றத்தின் உதவியுடன், தொழில் துறையின் உண்மையான தேவைக்கேற்ப பயிற்சிப் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். இந்த உறுதியான நடவடிக்கையானது, TVET திட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்ட திறமையான இளைஞர்களுக்குச் சிறந்த ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புகளை உறுதிச் செய்து, நாட்டிற்கு மிகப் பெரிய பலன்களை அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.








