கோலாலம்பூர், ஜூலை.27-
பள்ளிகளில் நடக்கும் பகடி வதை அல்லது வன்முறைச் சம்பவங்கள் வெறும் ஒழுங்கீனப் பிரச்சனை அல்ல, மாறாக தேசிய அளவிலான முக்கியப் பிரச்சனையாக கருதப்பட வேண்டும் என இக்காத்தான் கொமுனிட்டி செலாமாட் தலைவர் டான் ஶ்ரீ லீ லாம் தாய் வலியுறுத்தியுள்ளார். மாணவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுவதைத் தடுக்க, கல்வி அமைச்சு உடனடியாகவும் விரிவாகவும் செயல்பட வேண்டும் என்றார்.
ஆசிரியர்கள், ஆலோசகர்கள், பள்ளி நிர்வாகத்தினர் வன்முறைக்கான தொடக்க நிலை அறிகுறிகளைக் கண்டறிந்து, விரைந்து நடவடிக்கை எடுக்க பயிற்சி பெற வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மையுடன் புகார் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் கல்வி கற்பது அவர்களின் அடிப்படை உரிமை என அவர் சூளுரைத்துள்ளார்.








