கோலாலம்பூர், அக்டோபர்.07-
பொருள் பட்டுவாடா பணியாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்த ஆடவர் ஒருவர், மாதுவிடம் கொள்ளையிட்டதுடன், அவரைப் பாலியல் பலாத்காரம் புரிந்த பின்னர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மதியம் 12.40 மணியளவில் கோலாலம்பூர் வங்சா மாஜூவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்தது. கைப்பேசியிலிருந்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அந்த வீட்டிற்கு விரைந்த இரு போலீஸ்காரர்கள், வீட்டின் கதவைத் திறக்கும்படி பணித்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்தார்.
ஐந்து நிமிடம் கழித்து வீட்டின் கதவை ஆடவர் ஒருவர் திறந்துள்ளார். போலீஸ்காரர்கள் வீட்டைச் சோதனையிட்டு கொண்டிருந்த போது, அந்த ஆடவர் இறைச்சி வெட்டும் கத்தியால் போலீசாஸ்காரரைத் தாக்க முற்பட்டுள்ளார். அந்த நேரத்தில் பாதுகாவலரின் உதவியுடன் அந்த ஆடவரைப் போலீசார் வளைத்துப் பிடித்தனர்.
அப்போது மூச்சுத் திணறலுக்கு ஆளானதாக நம்பப்படும் அந்த ஆடவர் உயிரிழந்ததாக டத்தோ ஃபாடில் மர்சுஸ் குறிப்பிட்டார்.








