ஜோகூர் பாரு, மார்ச்.06-
ஜோகூர் பாருவில் பாகிஸ்தானியத் தொழிலதிபர் ஒருவரைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக அவரின் மனைவி மற்றும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு மாற்றுத் திறனாளி உட்பட 6 பேர் ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அந்த பாகிஸ்தான் தொழில் அதிபரின் மனைவி 53 வயது மனைவி ஷாமீம் பெகம் அப்துல் சையிட், ஒரு மாற்றுத் திறனாளியான 30 வயது முஹமட் ரஷிட் இஸ்மாயில் உட்பட ஆறு பேர், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டத்தோ சே வான் ஸைடி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இந்த அறுவரும், கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி நண்பகல் வேளையில், பாசீர் கூடாங் வர்த்தக மையத்தின் பின்னால் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அந்த தொழில் அதிபரிடம் கூட்டுக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தனது கணவரிடம் நடத்தப்பட்ட இந்த கொள்ளைச் சம்பவத்தில் தனக்கு தொடர்பு இருப்பதை பெண்மணி ஷாமீம் பெகம் ஒப்புக் கொண்டார். எனினும் அவருடன் சேர்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட மாற்றுத் திறனாளி குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
தனது சொந்த கணவரிடமே கொள்ளையடிக்க மூளையாக இருந்து செயல்பட்டதாகக் கூறப்படும் ஷாமீம் பெகமிற்கு எதிரான தீர்ப்பு வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி அளிக்கப்படும் என்று நீதிபதி சே வான் ஸைடி தெரிவித்தார்.
இந்த கொள்ளைச் சம்பவம் ஜோகூர் பாரு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மனைவியே தனது கணவரைக் கொள்ளையடிக்க உடந்தையாக இருந்ததும், நன்கு திட்டமிட்டுக் கும்பலாகச் சேர்ந்து ஐந்து லட்சம் ரிங்கிட்டைப் பறித்துச் சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.








