காஜாங், டிசம்பர்.20-
இந்தியாவைச் சேர்ந்த 20 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவர், தான் பயணம் செய்து கொண்டிருந்த இ-ஹெய்லிங் வாகன ஓட்டுநர், போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக, நடுவழியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.
புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்ட பின்னர், நள்ளிரவில் இ-ஹெய்லிங் வாகனச் சேவையின் மூலம், அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், சுங்கை ரமால் டோல் சாவடியை நெருங்கிய போது, அந்த ஓட்டுநர் மிகவும் பதற்றமடைந்ததைக் கண்டுள்ளார்.
இந்நிலையில், அங்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்திய சோதனை நடவடிக்கையில், அந்த ஓட்டுநர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, உடனடியாக அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டதோடு, வேறு ஒரு இ-ஹெய்லிங் சேவையின் மூலமாக அப்பெண் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட வாகன ஓட்டுநர் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல், போதைப் பொருள் பயன்படுத்தி வருவதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனை நடவடிக்கையின் போது, 45 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 8 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியானதாக, சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் அஸ்ரின் பொர்ஹான் தெரிவித்துள்ளார்.








