கடந்த ஆண்டு நடந்த தைப்பிங் சிறைச்சாலை கலவரம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, மலேசிய சிறைத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது குற்றவியல் சட்டம், பிரிவு 304(b)-இன் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அறிவித்துள்ளது.
அத்துடன், மேலும் ஐந்து சிறைத்துறை பணியாளர்கள், உள்துறை ஒழுங்கு நடவடிக்கையை தற்போது எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது சிறைத்துறையின் பொறுப்பு, நேர்மை மற்றும் சட்டத்தின் உயரிய நிலையை நிலைநிறுத்துவதில் தங்களது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், சட்டத்தையோ அல்லது சேவை விதிமுறைகளையோ மீறியதாக நிரூபிக்கப்படும் எந்த நபரையும், அவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், தாங்கள் பாதுகாக்கவோ? சமரசம் செய்யவோ? போவதில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதிகார துஷ்பிரயோகம், ஒழுங்கீனம் மற்றும் சட்ட மீறல்களுக்கு எதிராக 'Zero Tolerance' கொள்கையை சிறைத்துறை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான சட்ட நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதிகாரிகளுடன் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதில் சிறைத்துறை உறுதியாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.








