Sep 25, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி
தற்போதைய செய்திகள்

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

Share:

கோலாலம்பூர் மாநகரில் கடந்த 44 ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் இழுபறி நிலையில் இருந்து வந்த புக்கிட் கியாரா, ரூமா பாஞ்சாங் குடியிருப்பாளர்களின் வீட்டுப் பிரச்சனைக்கு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துரித நடவடிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

தலைமுறை தலைமுறையாக இழுபறியாக இருந்த இந்த மக்கள் பிரச்சனையைத் தீர்ப்பதில் பிரதமர் காட்டிய அசைக்க முடியாத அரசியல் மனத்திடமும், நிர்வாகத் திறனும் 'மடானி' அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்விதத் தாமதமும் இன்றி, பாதிக்கப்படுபவர்களுக்கு நீதியை நிலைநாட்டும் அரசாங்கத்தின் இந்த உறுதியான அணுகுமுறை, ஏழை எளிய மக்களின் நலனே தனது முதன்மை முன்னுரிமை என்பதை மீண்டும் ஒருமுறை பறைசாற்றியிருப்பதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு புதிய வீடுகள் வீதம் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு, நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று வர்ணித்துள்ளார்.

குறிப்பாக, அந்த வீட்டுவசதிப் பகுதியின் பராமரிப்பிற்காகக் கூடுதல் நிதியாக ஒரு மில்லியன் வெள்ளியைப் பிரதமர் ஒதுக்கியிருப்பது, வீடுகளைக் கட்டித் தருவதோடு மட்டுமல்லாமல், அந்த மக்களின் நீண்டகால வாழ்வின் தரத்தையும் பாதுகாப்பான சூழலையும் உறுதி செய்வதில் அரசாங்கம் கொண்டுள்ள தீர்க்கதரிசனமான அக்கறையைப் பிரதிபலிக்கிறது என்று அவர் புகழ்ந்துரைத்தார்.

இந்த வெற்றி, அரசாங்கத்தின் வாக்குறுதிகள் வெறும் வெற்று அரசியல் முழக்கங்களாக இல்லாமல், மக்களின் கண்ணீரைத் துடைக்கும் செயல்வடிவமாக மாறியுள்ளதற்கு மிகச்சிறந்த சான்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாபெரும் முன்னெடுப்பைச் சிறப்பாகச் செயல்படுத்திய கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ மற்றும் கோலாலம்பூர் மாநகராட்சி மேயர் டாத்தோ ஸ்ரீ ஃபத்லூன் மாக் உஜுத் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட ரமணன், பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான அரசாங்கம், ஒவ்வொரு கொள்கை முடிவிலும் மக்களின் நலனையே உயிர்மூச்சாகக் கொண்டு செயல்படுகிறது என்பதை இச்சம்பவம் உலகிற்கு உணர்த்தியிருப்பதாக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Related News