ஜோகூர், சிகமாட், புலோ காசாப்பில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த நான்கு நண்பர்களுக்கு, எதிர்பாராத வகையில் 15.85 மில்லியன் ரிங்கிட் அதிர்ஷ்டம் கைகூடியுள்ளது.
வியாபாரப் பங்காளிகளான அந்த நால்வரும், அங்குள்ள மாற்றுத்திறனாளிகள் இல்லத்தின் நிதி நெருக்கடி குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் சந்தித்த காபிக் கடைக்கு அருகிலேயே டா மா சாய் விற்பனை நிலையம் இருப்பதைக் கவனித்தனர்.
உடனே பணத்தை ஒன்றாகச் சேர்த்து ஒரு சீட்டு வாங்கியுள்ளனர்.
செப்டம்பர் 13 ஆம் தேதி குலுக்கல் முடிவைத் தொடர்ந்து, அவர்களில் ஒருவர் டா மா சாய் செயலியில் எண்களைச் சரிபார்த்தபோது, தங்களுக்கு முதல் பரிசான 15.85 மில்லியன் ரிங்கிட் கிடைத்திருப்பது தெரிய வந்தது.
நேற்று பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்ட நால்வரும், அதை சமமாகப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
மேலும், தங்களது நிதி எதிர்காலத்துக்கும் ஓய்வுக்காலத்துக்கும் ஒரு பகுதியை ஒதுக்குவதுடன், தாங்கள் பேசிய அதே மாற்றுத்திறனாளிகள் இல்லத்தின் உடனடி செலவுகளுக்கும், அங்குள்ள வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஒரு பகுதியை வழங்க முடிவு செய்துள்ளனர்.








