ஜோகூர் பாரு, டிசம்பர்.24-
பேரங்காடியில் கைகலப்பில் ஈடுபட்டது மற்றும் போலீஸ் நிலையத்தில் வாய்த் தகராற்றில் ஈடுபட்டது தொடர்பில் சிங்கப்பூர் கலைஞர் ஒருவர் உட்பட நால்வர் ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
சிங்கப்பூர் பிரஜையான 46 வயது P. சுரேஷ், மாஜிஸ்திரேட் ஏ. ஷார்மினி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தமிழில் வாசிக்கப்பட்டது.
அதேவேளையில் 56 வயது வர்த்தகர் சுவா சின் ஹெங், அவரின் 55 வயது மனைவி லோ சோ பெங் மற்றும் அவர்களின் 27 வயது மகன் Axi Chua Kai Jun ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு ஆங்கிலமொழியில் வாசிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி மாலை 6.15 மணியளவில் லார்கின் போலீஸ் நிலைய வளாகத்தில் சுரேஷும், சுவா சின் ஹெங்கும் தகராற்றில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அதே வேளையில் ஜோகூர் பாரு, ஜாலான் செரிகாலாவில் உள்ள ஒரு பேரங்காடியில் சுரேஸிற்கு காயம் விளைவித்ததாக சுவா சிங் ஹெங், அவரின் மனைவி மற்றும் மகனுக்கு எதிராகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 6 மாதச் சிறை அல்லது 500 ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் வகையில் நால்வரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நால்வரும் சண்டையிட்டுக் கொண்ட காட்சி, அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலரானது.








