தமிழர்களின் வாழ்வியலுடன் தங்களை பிணைத்துக் கொண்டு ஒற்றுமைமிகுந்த மக்களாக வாழும் மொரிசியஸ் நாட்டு மக்கள், தமிழ்மொழி, சமயம் ஆகியவற்றை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆப்பிரிக்கா கண்டத்தில் ஒரு தீவு நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ள மொரிசியஸ் நாட்டின் 200 ஆண்டு கால தமிழர்களின் வரலாற்றில் அந்நாட்டிற்கு குடிபெயர்ந்த தமிழர்களில் பலர் மொழியை மறந்தவர்களாக இருந்தாலும் தமிழையும், இந்து சமயத்தையும் தொடர்ந்து காக்க வேண்டும் என்ற வேட்கையில் தற்போது பல்வேறு முன்னெடுப்புகளை அங்குள்ள தமிழர்கள் மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கதாகும் என்று டான்ஸ்ரீ நடராஜா புகழாரம் சூட்டினார்.
மொரிசியஸிற்கு சிறப்புப் பயணம் மேற்கொண்டுள்ள டான்ஸ்ரீ நடராஜா, அந்நாட்டின் தொடக்கப் பள்ளித் தமிழாசிரியர் சங்கம் சார்பில் தமிழ்க்கழகத்தில் மலேசியப் பிரதிநிதிகளுக்கு வழங்கிய மாபெரும் வரவேற்பு நிகழ்வில் டான்ஸ்ரீ நடராஜா மேற்கண்ட கோரிக்கைவை விடுத்துள்ள்ளார்.
உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையை கோலாலம்பூர் மகாமாரியம்மன் தேவஸ்தானம் தனது பத்துமலைத் திருத்தலத்தில் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்க்கடவுன் முருகனின் பெருமையை உலக மக்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் ஓர் உன்னத நிலையில் பத்துமலைத் திருத்தலத்தில் போற்றி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
முருகனின் உயரமான சிலையை காண்பதற்கு மொரியசியஸ் மக்கள், மலேசியாவிற்கு வருகை தர வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா அழைப்பு விடுத்தார். இந்நிகழ்வில் மலேசிய பேராளர்கள் குழுவிற்கு மொரிசியஸ் தமிழாசிரியர் சங்கம் மகத்தான வரவேற்பை நல்கி உபசரித்தது.








