ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.20-
ஜோகூரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரு சிறுவனை மற்றொரு சிறுவன் வயிற்றில் உதைப்பதாக வைரலாகிய காணொளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் 33 வயது தாயார் இது குறித்து புகார் அளித்திருப்பதாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.
ஜோகூரில் மோலேக் ரியா, ஜாலான் பெர்சியாரான் பூமி ஹீஜாவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டுத் தொகுதியின் கீழ்த் தளத்தில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அதே குடியிருப்புப் பகுதியில் தங்கியிருப்பதாக நம்பப்படும் ஒரு சிறுவன் தனது மகனின் வயிற்றில் உதைத்ததாக சம்பந்தப்பட்ட மாது புகார் அளித்துள்ளார். இது குறித்து தாங்கள் விசாரணை செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை “டோ ஜோன்” என்பவர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றியிருப்பதாக அறியப்படுகிறது.








