பேரா, சுங்கை சிப்புட்டில் உள்ள கம்போங் பெங்காலி கிராமத்தில் சுமார் நூறாண்டு காலமாக நீடித்து வரும் 27 இந்தியக் குடும்பங்களின் நிலப் பிரச்சினைக்கு விரைவில் உரிய நடவடிக்கை மூலம் தீர்வு காணப்பபடும் என்று பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான டத்தோ அ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.
ஈப்போவில் உள்ள இந்திரா மூலியா அரங்கில், மாநில மந்திரி பெசார் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வின் போது, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகள் டத்தோ சிவநேசனை நேரில் சந்தித்து இக்கோரிக்கையை முன்வைத்தனர்.
பல ஆண்டு காலமாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும் இதுவரை எந்தப் பயனும் கிடைக்காத நிலையில், தற்போது இந்த விவகாரம் டத்தோ சிவநேசனின் நேரடி கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய டத்தோ சிவநேசன், "அரசாங்க நிலத்தில் வசித்து வந்த பல இந்தியக் குடும்பங்களின் நிலப் பிரச்சினைகளுக்கு ஏற்கனவே வெற்றிகரமாகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.
அதே போல், சுங்கை சிப்புட் பகுதியில் இதற்கு முன்பு இருந்த நிலப் பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டுள்ளன. எனவே, கம்போங் பெங்காலி கிராம மக்களின் இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கும் விரைவில் நல்லதொரு தீர்வு எட்டப்படும்" என்று டத்தோ சிவநேசன் உறுதியளித்தார்.
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வின் போது, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் கே. மணிமாறனும் உடனிருந்தார்.












