மலேசியாவில் மாநிலத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், மக்களைப் பிரித்தாளும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இனவாத அரசியல் பிரச்சாரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
கோலாலம்பூர், தாமான் ரிம்பா கியாராவில் நடைபெற்ற வீடமைப்புத் திட்டத்தின் பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர், "தேர்தல் காலங்களில் ஒரு இனத்திற்கு எதிராக மற்றொரு இனத்தை மோதவிடும் பிரச்சாரங்களால் ஏழை எளிய மக்களுக்கே பெரும் இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய அரசியல் சூழலில் சாதாரண மக்களின் உரிமைகளுக்காகப் போராட யாரும் முன்வருவதில்லை" என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
மலேசியா முஸ்லிம்கள், மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாக இருந்தாலும், இங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளும் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், ஒரு சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பது மற்றொரு சமூகத்தின் வாய்ப்புகளைப் பறிப்பது ஆகாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
நல்லாட்சி என்பது வெறும் வெற்று முழக்கங்கள் அல்ல; அது மக்களின் மீதான இரக்கம், ஆன்மா மற்றும் நீதியுடன் செயல்படுவதில்தான் அடங்கியுள்ளது என்றும் பிரதமர் அன்வார் சுட்டிக்காட்டினார்.








