Sep 27, 2026
Thisaigal NewsYouTube
வீட்டுக் காவல் மனு நிராகரிப்பு / உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை திரும்பப் பெற்றார் நஜிப்
தற்போதைய செய்திகள்

வீட்டுக் காவல் மனு நிராகரிப்பு / உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை திரும்பப் பெற்றார் நஜிப்

Share:

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை, வீட்டுக் காவலில் கழிக்க அனுமதி கோரி தான் தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கு எதிராகத் தொடர்ந்த மேல்முறையீட்டை, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

நஜீப் சார்பிலான சட்ட நிறுவனமான மெசர்ஸ் ஷாஃபி அண்ட் கோ கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி மேல்முறையீட்டை வாபஸ் பெறும் அறிவிப்பை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேல்முறையீட்டை வாபஸ் பெற்றதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

எனினும், அதனை புதிய மனுவாக மீண்டும் தாக்கல் செய்ய உரிமையின்றியும், செலவின உத்தரவு இன்றியும் வழக்கு நிறுத்தப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் வீட்டுக் காவல் கோரும் அதே மேல்முறையீட்டை நஜிப்பால் மீண்டும் தாக்கல் செய்ய இயலாது.

கடந்த ஆண்டு டிசம்பரில், எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கில், குறைக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையை, வீட்டுக் காவலில் கழிக்க, முன்னாள் மாமன்னர், தமக்கு கூடுதல் அரசாணை உத்தரவு ஒன்றை வழங்கியதாக கூறி, நஜீப் தொடுத்திருந்த வழக்கில், அந்தக் 'கூடுதல் அரசாணை' செல்லாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி அலிஸ் லோக் யீ சிங் தீர்ப்பளித்தார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 42 ஆவது விதியை மாமன்னர் பின்பற்றவில்லை என்று நீதிபதி Alice தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News