Aug 27, 2026
Thisaigal NewsYouTube
நேபாள பெருவெள்ளம்: 55 மலேசியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை – தேடுதல் பணிகள் தீவிரம்
தற்போதைய செய்திகள்

நேபாள பெருவெள்ளம்: 55 மலேசியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை – தேடுதல் பணிகள் தீவிரம்

Share:

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் தங்கியிருந்த 55 மலேசியர்களை தற்போது தொடர்புகொள்ள முடியவில்லை என மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், தொலைத்தொடர்பு மற்றும் மின்சார சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

குடும்பத்தினர், பயண முகவர்கள் உள்ளிட்ட தரப்புகளிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், காத்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட 55 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான அணுகல் கடினமாக இருந்தபோதிலும், நேபாள அதிகாரிகள் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, மலேசிய தூதரகம் நேபாள அதிகாரிகள், மீட்புக் குழுக்கள், சுற்றுலா வாரியம், பயண முகவர்கள் மற்றும் காத்மாண்டுவில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுடன் இணைந்து, மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பிடத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை மலேசியர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணி முதல் புத்ராஜெயாவில் வெளியுறவு அமைச்சின் அவசர செயல்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மலேசியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான தகவல் தொடர்பு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related News