நாட்டின் ஒன்பதாவது பிரதமராக அதிகார உச்சத்தில் இருந்த டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இன்று எஸ்.பி.ஆர்.எம் விசாரணையின் மையப்புள்ளியாகி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆனால், முன்னாள் பிரதமரை நோக்கிய இந்த விசாரணை வலை எப்படிப் படிப்படியாக விரிக்கப்பட்டது?
விசாரணை நேரடியாக இஸ்மாயில் சப்ரியிடம் தொடங்கவில்லை. முதலில், அவருடன் நெருக்கமாகப் பணியாற்றிய முன்னாள் உயர் அதிகாரிகள் எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, பல இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.
அப்போது, முன்னாள் அதிகாரிகளுடன் தொடர்புடைய வீடுகள் மற்றும் பாதுகாப்பு வீடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இடங்களில் பெரும் தொகை ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு நாணயங்களில் சுமார் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணமும், சுமார் 7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 16 கிலோ தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தப் பெரும் பறிமுதல், விசாரணையில் ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. யாருடைய பணம்? எங்கிருந்து வந்தது? எதற்காக இவ்வளவு பெரும் தொகை பாதுகாப்பு வீடுகளில் வைக்கப்பட்டது? என்ற கேள்விகளைச் சுற்றி எஸ்.பி.ஆர்.எம் விசாரணை தீவிரமடைந்தது.
முன்னாள் அதிகாரிகளை நோக்கி தொடங்கிய விசாரணை, படிப்படியாக முன்னாள் பிரதமரின் வட்டத்துக்குள் நகர்ந்தது. இஸ்மாயில் சப்ரி பலமுறை எஸ்.பி.ஆர்.எம் -யில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். பின்னர், சொத்துகளை அறிவிக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, அவரது உடல்நலப் பிரச்சினையால் குற்றச்சாட்டு நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சைக்குப் பிறகு அவர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இறுதியில், சொத்துகளை அறிவிக்கத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், இஸ்மாயில் சப்ரி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
முன்னாள் அதிகாரிகளை நோக்கி தொடங்கிய எஸ்.பி.ஆர்.எம் விசாரணை... பாதுகாப்பு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் தொகை பணம்... தங்கக் கட்டிகள்... தொடர் விசாரணைகள்... இறுதியில் முன்னாள் பிரதமரின் நீதிமன்ற வாசல்வரை வந்து சேர்ந்தது. இஸ்மாயில் சப்ரி மீது எஸ்.பி.ஆர்.எம் வலையை விரித்த பயணம் இதுதான்








