நேபாள நாட்டில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து, அங்கு பயணம் மேற்கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட மலேசியர்களை அவர்களது குடும்பத்தினரால் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பேரழிவில் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் நேபாள நாட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மலேசியர்களின் நிலை குறித்து தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக காத்மாண்டு-வில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவித்துள்ளது.
போட்டே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள அரசாங்கம் ஹெலிகொப்டர்களை அனுப்பியுள்ளதாகவும் அந்நாட்டிற்கான மலேசியத் தூதர் முகமது பிர்தௌஸ் அஸ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதால், காணாமல் போன மலேசியர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மலேசிய தூதரகம் நேபாள அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, மாயமான மலேசியர்களின் நிலையை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.








