கோலாலம்பூர், ஆகஸ்ட்.23-
மக்கள் மத்தியில் தொடர்ந்து பதற்றம் நிறைந்த அறிக்கைகளை வெளியிட்டு வரும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலேவுடனான தொடர்பை ஜசெக துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஜசெக இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
பல இனங்களிடையே சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் விதைக்க வேண்டிய ஒரு தலைவர், தொடர்ந்து அச்சுறுத்தும் தன்மையிலான அறிக்கைகளை வெளியிட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடி விவகாரம் தொடர்பில் தனது முகநூலில் பதற்றம் நிறைந்த அறிக்கையை வெளியிட்டதற்காக அந்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் நேற்று புக்கிட் மெர்தாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைக்குப் பிறகும் டாக்டர் அக்மால் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டு வருவதால் அவருடன் அரசியல் தொடர்பு கொண்டு இருப்பது குறித்து ஜசெக பரிசீலிக்க வேண்டும் என்று சிலாங்கூர் ஜசெக இளைஞர் பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








