Jul 18, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் 4-ஆவது மாநில அளவிலான திருவாசக முற்றோதல் ஞான வேள்வி விமரிசையாக நிறைவு
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் 4-ஆவது மாநில அளவிலான திருவாசக முற்றோதல் ஞான வேள்வி விமரிசையாக நிறைவு

Share:

மலாக்காவில் அமைந்திருக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் திரௌபதி அம்மன் ஆலயத்தில், கடந்த ஜூன் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான 4-ஆவது திருவாசக முற்றோதல் ஞான வேள்வி மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடந்து முடிந்தது. மலேசிய சிவனடியார் திருச்சபை, மலேசிய நால்வர் மன்றம் மற்றும் ஆலய பரிபாலன சபை ஆகியவை இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

காலை 7.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இந்த ஆன்மீகப் பெருவிழாவில், ஏறக்குறைய 350 அடியார் பெருமக்கள் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டனர். சமயக்குரவர் மாணிக்கவாசகப் பெருமான் பாட, எம்பெருமான் ஈசன் தன் கைப்பட எழுதிய 658 பாடல்களைக் கொண்ட திருவாசக ஞானப் பணுவலை, ஓதுவார்கள் மற்றும் மிருதங்க கலைஞர்களோடு இணைந்து வந்திருந்த அடியார்கள் அனைவரும் முழுமையாக முற்றும் ஓதி சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக, இதற்குப் பெரும் ஒத்துழைப்பு நல்கிய ஸ்ரீ சுப்பிரமணியர் திரௌபதி அம்மன் ஆலய நிர்வாகத்தினருக்கு ஏற்பாட்டாளர்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், ஆலய குருக்கள் மற்றும் மலாக்கா மாநில நால்வர் மன்ற நிர்வாகத்தினருக்கும் சிறப்பு செய்யப்பட்டது. இம்மாநிலத்தைத் தொடர்ந்து, அடுத்த திருவாசக முற்றோதல் நிகழ்வு கூட்டுறவு பிரதேச மாநிலத்தில் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Related News