கோலாலம்பூர், அக்டோபர்.30-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள ஏரோடிரேன் ரயில் சேவை மீண்டும் பழுதடைந்த சம்பவம் குறித்து, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கடும் அதிருப்தியையும், அவமானத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட கோளாறினால், பயணிகள் தங்கள் பயணப் பைகளை இழுத்துக் கொண்டு ரயில் பாதையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது மிகுந்த அவமானகரமான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள அந்தோணி லோக், மக்களின் ஏமாற்றத்தைத் தானும் உணர்ந்ததாக நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதை நான் உறுதிச் செய்வேன். இது புதிய ரயில் முறை என்ற போதிலும் எதிர்பார்த்தத் தரமான சேவையை வழங்கத் தவறியதற்காக இதற்குப் பொறுப்பேற்கும்படி சம்பந்தப்பட்ட குத்தகையாளரை மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அந்தோணி லோக் வலியுறுத்தினார்.








