Jul 25, 2026
Thisaigal NewsYouTube
பேராக் பன்றிப் பண்ணைகள் நவீனமயமாக்கல்: டத்தோ அ. சிவநேசன்
தற்போதைய செய்திகள்

பேராக் பன்றிப் பண்ணைகள் நவீனமயமாக்கல்: டத்தோ அ. சிவநேசன்

Share:

பேராக் மாநிலத்தில் பல தசாப்தங்களாக பாரம்பரிய முறையில் இயங்கி வந்த பன்றிப் பண்ணைகளை, சுற்றுச்சூழலுக்கு உகந்த நவீன முறைக்கு மாற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்துள்ளார். பேராக், ஆயர் கூனிங்கில் உள்ள பண்ணைகளை நேரில் பார்வையிட்ட பின் டத்தோ சிவநேசன் செய்தியாளர்களிம் இதனைத் தெரிவித்தார்.

உலகளவில் 36 விழுக்காடு மக்களும், மலேசியாவின் பல்வேறு சமூகத்தினரும் பன்றி இறைச்சியை உணவாகப் பயன்படுத்துவதால், பண்ணைகளை மூடுவது நடைமுறைக்கு ஏற்ற தீர்வாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டார். அவ்வாறு மூடினால் கோழி இறைச்சியின் தேவை அதிகரித்து அதன் விலை உயரக்கூடும் என்பதால், இத்தொழிலை முழுமையாக நவீன மற்றும் சுகாதாரமான முறையில் தொடரச் செய்வதே அரசின் நோக்கமாகும் என்று டத்தோ சிவநேசன் விளக்கினார்.

ஆயர் கூனிங்கில் 125 ஆக இருந்த பண்ணைகளின் எண்ணிக்கை, ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தாக்கத்தால் தற்போது 83 ஆகக் குறைந்துள்ளது. இதில் 28 பன்றிப் பண்ணைகள் சுமார் 627 மில்லியன் ரிங்கிட் முதலீட்டில் 100 விழுக்காடு நவீன தரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பண்ணைகளை நவீனப்படுத்த மேலும் 1.8 பில்லியன் ரிங்கிட் முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துறை மூலம் பேராக் மாநிலம் முழுவதும் சுமார் 300 உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று டத்தோ சிவநேசன் விவரித்தார்.

மேலும், கோப்பெங்கில் 80 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டு வரும் நவீன பன்றி இறைச்சி பதப்படுத்தும் மையம் அடுத்த ஐந்து மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றும், அதன் பின்னர் அனைத்து பதப்படுத்தும் பணிகளும் ஒரே இடத்தில் சுகாதாரமாக நடைபெறும் என்றும் டத்தோ அ. சிவநேசன் கூறினார். இதனைத் தொடர்ந்து, பத்தாங் பாடாங் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 13 பன்றிப் பண்ணைகளும் அடுத்த கட்டமாக நவீனப்படுத்தப்படும் என்று டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.

Related News