கோத்தா கினபாலு, அக்டோபர்.05-
சபா, ஜாலான் பெனாம்பாங் பாருவில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் காவற்படையினர் அதிரடியாகச் சோதனை நடத்தியதில், அங்கு கூடியிருந்த 214 பேரின் உற்சாகம் அணைந்தது. போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க நடத்தப்பட்ட இந்தச் சிறப்பு நடவடிக்கையில், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட 122 ஆண்களும் 92 பெண்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக சபா மாநிலக் காவற்படையின் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிடிவின் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் அல்ஹுசேன் ஹாலில் தெரிவித்தார்.
சிறுநீர் பரிசோதனையில், நான்கு ஆண்களும் மூன்று பெண்களும் உட்பட மொத்தம் ஏழு பேருக்கு Methamphetamine உள்ளிட்ட போதைப் பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அங்கிருந்து ekstasi மாத்திரைகளும் பிற போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.








