கூலிம், நவம்பர்.16-
கெடா, கூலிம், கம்போங் பட்லிஷா பகுதியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 9 வயதுச் சிறுவன், எதிர்பாராத விதமாக சுமார் இரண்டு மீட்டர் ஆழம் கொண்ட குட்டைக்குள் சென்று மூழ்கியதில் பரிதாபமாக உயிரிழந்தான். தன் கண்முன்னே நண்பன் நீரில் தத்தளிப்பதைக் கண்ட 13 வயதுச் சிறுவன், அவனைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் தோல்வியடையவே, உடனடியாக உதவிக்காகக் கிராம மக்களை அழைத்தான்.
சம்பவ இடத்துக்கு விரைந்த சிறுவனின் தந்தையும் கிராம மக்களும், சுமார் 30 நிமிடங்கள் போராடி அந்தச் சிறுவனின் சடலத்தை ஆழத்திலிருந்து மீட்டதாக கூலிம் மாவட்டக் காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்தார். இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கூலிம் மாவட்டக் காவற்படையினர் வழக்குப் பதிவுச் செய்து, மேலும் இது போன்ற ஆபத்தான இடங்களில் மக்கள் செல்வதைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.








