பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.17-
பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது மாணவர், விசாரணைக்கு ஏற்புடையவர் என மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
பேரா மாநிலம், பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அளித்த சான்றிதலின் படி, தனது கட்சிக்காரர் நீதிமன்ற விசாரணைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் ஏற்புடையவராகக் கருதப்படுகின்றார் என அம்மாணவரின் வழக்கறிஞர் கிட்சன் ஃபூங் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்ற விசாரணையின் போது, அம்மாணவர் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள முடியும் என்றும் கிட்சன் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட அந்த மாணவர், சிலாங்கூர் புஞ்சாக் அலாமில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே வேளையில், மாதம் ஒருமுறை மனநல சிகிச்சைக்காக அவர் பஹாகியா உலு கிந்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வழக்கில் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி, மேல் விசாரணை தொடரவுள்ளது.








