ஷா ஆலாம், ஜனவரி.26-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆலோசனையைத் தொடர்ந்து, உலு சிலாங்கூர், புக்கிட் தகாரில் பன்றி வளர்ப்புத் தொழிலை மையப்படுத்தும் திட்டத்தைச் சிலாங்கூர் அரசு ரத்து செய்துள்ளது.
இத்திட்டத்திற்கு எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, கடந்த வாரம் நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார், இந்தத் திட்டத்தை ரத்து செய்ய அறிவுறுத்துவதற்கு முன்பே, புக்கிட் தகாருக்கு பதிலாக மாற்று இடத்தைத் தேடுமாறு மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாயக் குழுத் தலைவர் இஷாம் ஹாஷிமுக்கு மாநில நிர்வாகக் குழு உத்தரவிட்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், உள்ளூர் சமூகத்தினரிடையே அமைதியின்மையை உருவாக்கும் என்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
முன்னதாக, சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அவர்களும் இத்திட்டம் குறித்து தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








