கோலாலம்பூர், ஜூலை.16-
மலேசியாவில் முறையான அடையாள ஆவணங்கள் இல்லாமல் தவித்து வரும் இந்தியச் சமுதாயத்தினருக்கு, நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தகுதியான நியாயமான தீர்வுகள் வழங்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃசைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இனம் அல்லது மதப் பாகுபாடின்றி, ஆவணப் பிரச்னைகளை எதிர்நோக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் டத்தோ ஸ்ரீ ஃசைபுடின் உறுதியளித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்தியச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் ஆவண விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
தற்காலிக வசிப்பிட அடையாள அட்டையான MyKAS விவகாரத்தில் இந்திய சமுதாயத்தினரிடமிருந்து பெறப்பட்ட மொத்தம் 298 MyKAS விண்ணப்பங்களில், 286 விண்ணப்பங்களுக்கு வெற்றிகரமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பிரிவில் 96 விழுக்காடு விண்ணப்பங்கள் தீர்வு காணப்பட்டுள்ளன.
தாமதமான பிறப்புப் பதிவு விவகாரத்தில் பல்வேறு காரணங்களால் பிறப்பைத் தாமதமாகப் பதிவு செய்தவர்களில், மொத்தம் 3,117 விண்ணப்பங்கள் உள்துறை அமைச்சின் பரிசீலனைக்கு வந்தன. அவற்றில் 2,810 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு, 90 விழுக்காடு வெற்றிகரமான தகுதி நிலையை எட்டியுள்ளன.
அதேவேளையில் மலேசியக் குடியுரிமை விண்ணப்ப விவகாரத்தில் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட 1,018 குடியுரிமை விண்ணப்பங்களில், இதுவரை 141 பேரின் விண்ணப்பங்களுக்கு அல்லது 13.9 விழுக்காட்டினரின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமை வழங்குவது என்பது நாட்டின் இறையாண்மையோடு நேரடித் தொடர்புடைய மிக முக்கியமான விஷயம் என்பதால், இந்த விண்ணப்பங்கள் மிகவும் நுணுக்கமான பாதுகாப்பு மற்றும் சட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகே அங்கீகரிக்கப்படுவதாக அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃசைபுடின் சுட்டிக் காட்டினார்.
தேசியப் பதிவுத் துறையின் தரவுப் பட்டியலில் "ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது " அல்லது அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்படும் புள்ளி விவரங்கள், சம்பந்தப்பட்ட நபருக்கு, குடியுரிமைச் சான்றிதழ் முழுமையாக அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட இறுதி நிலையை மட்டுமே குறிக்கும் என அமைச்சர் விளக்கினார். உள்துறை அமைச்சின் ஒப்புதல் பெற்று, இன்னும் சான்றிதழ்களைப் பெறாதவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் Dalam Proses அல்லது செயல்பாட்டில் உள்ளது" என்றே கணக்கிடப்படுகிறது.
"தகுதியான ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் உரிய உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதே வேளையில், நாட்டின் தேசியப் பதிவு முறையான JPN நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை" என டத்தோ ஸ்ரீ ஃசைபுடின் திட்டவட்டமாகக் கூறினார்.








