இளம் பெண்கள் குறிப்பாக வன்முறை மற்றும் கொலைக்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான கொலைச் சம்பவங்களில் பலியானவர்களில் பெண்கள் அதிகம் இருப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், இது பாலின அடிப்படையிலான வன்முறையின் பரந்த பிரச்சினையாக இருக்கலாம் என்பதால் காரணங்களை ஆழமாக ஆராய வேண்டும் என்றார்.
ஜோகூர், யோங் பெங்கில் பயிற்சி வகுப்புக்குச் சென்ற 16 வயது மாணவி ஐரின் சோஃபியா ஃபைசால் பள்ளி மண்டபத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார். உடற்கூறு பரிசோதனையில் தலையில் ஏற்பட்ட கடுமையான தாக்குதலால் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
வன்முறை அல்லது பகடிவதை சம்பவங்கள் தொடர்பில் மாணவர்கள் உடனடியாக அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும் என்றும் அஸாலினா வலியுறுத்தியுள்ளார்.








