ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.11-
தமது வரலாற்றுப்பூர்வமான 6 நாள் அதிகாரத்துவ ரஷ்யப் பயணத்தை முடித்துக் கொண்டு, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று திங்கட்கிழமை பாதுகாப்பாக நாடு திரும்பினார்.
மாமன்னரை ஏற்றி வந்த சிறப்பு விமானம், காலை 6.30 மணிக்கு ஜோகூர், செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
மாமன்னரை ஜோகூர் இடைக்கால சுல்தான், துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயில், துங்கு பங்லிமா ஜோகூர் துங்கு அப்துல் ரஹ்மான் சுல்தான் இப்ராஹிம் மற்றும் துங்கு புத்ரா ஜோகூர் துங்கு அபு பாக்கார் சுல்தான் இப்ராஹிம் ஆகியோர் எதிர்கொண்டு வரவேற்றனர்.
1967 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்ட மலேசியாவின், மாமன்னர் ஒருவர் மாஸ்கோவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும்.
மலேசியாவின் 17 ஆவது மாமன்னராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெறுப்பேற்றது முதல் சுல்தான் இப்ராஹிம், ரஷ்யாவிற்கு மேற்கொண்ட வருகை, அவரின் நான்காவது அதிகாரத்துவ வெளிநாட்டுப் பயணமாகும்.
இதற்கு முன்பு சிங்கப்பூர், சீனா மற்றும் புருணைக்கு சுல்தான் இப்ராஹிம் மலேசியாவின் மாமன்னர் என்ற முறையில் அதிகாரத்துவப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.








