மூவார், ஜூலை.19-
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான், கடந்த நான்கு நாட்க நடைபெற்ற 170 கிலோமீட்டர் "Larian Kesyukuran" ஓட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
லாமான் மஹாராணி பகுதியில் சுமார் 2,000 பொதுமக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
கடந்த ஜூலை 16-ஆம் தேதி புத்ராஜெயா நீதிமன்ற அரண்மனையில் தொடங்கிய இந்த நலநிதி ஓட்டத்தின் இறுதி 17 கி.மீ. தூரத்தை இன்று மலாக்காவின் சிம்பாங் சுங்கை ரம்பாயிலிருந்து ஓடி இலக்கை அடைந்தார்.
மூவார் தொகுதி மக்களுக்கான நலத்திட்டங்கள், உணவுப் பொதிகள் மற்றும் வசதி குறைந்த மாணவர்களுக்கு கையடக்கக் கணினி உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்காக நடத்தப்பட்ட இந்த முயற்சியில், ஆரம்ப இலக்கான 2 லட்சத்தைத் தாண்டி 6 லட்சத்து 50 ஆயிரத்து 959 ரிங்கிட் நிதி திரட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடைசி 10 கிலோமீட்டரில் மக்கள் அளித்த ஆதரவு தன்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், சிறுவன் ஒருவன் வழங்கிய 50 சென் நன்கொடையும் தனக்கு மிகவும் மதிப்புமிக்கது என்றும் சையிட் சாடிக் தெரிவித்துள்ளார்.








