பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மடானி அரசாங்கத்துடன் நம்பிக்கை மற்றும் நிதி வழங்கல் ஒப்பந்தமான சிஎஸ்எவில் கையெழுத்திட்டுள்ளனர்.
பெர்சாத்து தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான இந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமரின் பதவிக்காலத்தை வரையறுப்பது மற்றும் சட்டத்துறைத் தலைவர், அரசு தரப்பு வழக்கறிஞர் ஆகிய பதவிகளைப் பிரிப்பது என இரண்டு முக்கிய சீர்திருத்தங்களை தற்போதைய ஆட்சிக்காலம் முடிவதற்குள் அமல்படுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர்.
இதற்குப் பதிலாக, 2027-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
மேலும், பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை அரசாங்கம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
இதன் மதிப்பு ஆண்டுக்கு 3 மில்லியன் முதல் 4 மில்லியன் ரிங்கிட் வரை இருக்கும் என முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தத்தில் முஹிடின் யாசினுடன் டத்தோ டாக்டர் முஹமட் ரட்ஸி முஹமட் ஜிடின், முஹமட் நஸ்ரி அபு ஹசான், டத்தோ முஹமட் சுஹைமி அப்துல்லா, டத்தோ அலி பிஜு மற்றும் டத்தோ அஸ்மான் நஸ்ருடின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இவர்களுடன் மூடா கட்சியின் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் மற்றும் பெர்சாத்துவிலிருந்து நீக்கப்பட்ட ஆறு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இருப்பினும், பெர்சாத்து தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே செயல்படும் என்றும், அரசின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்பைத் தொடரும் என்றும் முஹிடின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 89 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மசோதா நாடாளுமன்றத்தில் கொள்கை அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.








