கோத்தா கினபாலு, ஜூலை.18-
மாணவன் ஒருவன், பள்ளிக் கட்டடத்திலிருந்து கீழே விழுந்து மரணமுற்ற சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விரிவான விசாரணை நடத்தும் என்று அதன் அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் போலீஸ் துறைக்குக் கல்வி அமைச்சு முழு ஒத்துழைப்பு நல்கும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.
புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய ஆருடங்கள் எதனையும் கூற வேண்டாம் என்று அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
சபா, கோத்தா கினபாலுவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து அமைச்சு அளவில் எல்லா கோணங்களிலும் ஆராயப்பட்டு வருவதாக ஃபாட்லீனா குறிப்பிட்டார்.








