Sep 1, 2026
Thisaigal NewsYouTube
கேபிள் திருடர்களின் கார் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு - 30 நிமிடங்கள் துரத்திச் சென்று பிடித்த போலீசார்
தற்போதைய செய்திகள்

கேபிள் திருடர்களின் கார் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு - 30 நிமிடங்கள் துரத்திச் சென்று பிடித்த போலீசார்

Share:

கோலாலம்பூரில் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் சுமார் 30 நிமிடங்கள் காரில் துரத்திச் சென்றனர்.

அப்போது காரின் டயர்களை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 29 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் தப்பியோடினார்.

நேற்று காலை 9.30 மணியளவில் கேசாஸ் நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான பச்சை நிற ஃபோர்டு ரேன்ஜர் வாகனத்தை போலீசார் கண்டதாகவும், வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டும் அவர்கள் தப்பிச் சென்றதால், முதலில் டயரை நோக்கி ஒரு முறை சுடப்பட்டது என்றும் கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாதில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவான் பெசார் முதல் ஸ்ரீ பெட்டாலிங் மற்றும் சுங்கை பெசி வரை துரத்தல் தொடர்ந்தது. போலீசாரை வாகனத்தால் மோத முயன்றதால் மேலும் 5 முறை டயரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் மாஸ்டா கார் மீது மோதி நின்றது.

வாகனத்தை சோதனையிட்டதில் திருடப்பட்ட கேபிள்கள் மற்றும் கேபிள் திருட பயன்படுத்தப்பட்ட கருவிகள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர் மீது ஏற்கனவே 37 குற்றப் பதிவுகள் இருப்பதுடன், போலீசாரால் தேடப்பட்டு வந்தவரும் ஆவார். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related News