வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர் கூலாய் அருகில் இன்று காலை நிகழ்ந்த 6 வாகனங்கள் சம்பந்தப்பட்ட பயங்கர விபத்தில், முப்பது வயது மதிக்கத்தக்க லாரி ஓட்டுநர் ஒருவர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காலை 9.02 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் இரு கன்டெய்னர் லாரிகள், ஒரு டொயோட்டா ஹிலக்ஸ், ஒரு நிசான் வாகனம் மற்றும் இரு லாரிகள் உட்பட 6 வாகனங்கள் மோதிக்கொண்டன. இதில் 4 வாகனங்கள் முற்றிலும் தீப்பற்றி எரிந்ததால், தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைப் போக்குவரத்து பல மணி நேரத்திற்கு முடங்கியது.
கடுமையான போக்குவரத்து நெரிசலையும் கடந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தினர். இவ்விபத்தில் மற்ற 4 பேர் காயமின்றி தப்பிய வேளையில், மேலும் இரு ஓட்டுநர்கள் சம்பவ இடத்தில் இல்லாததால் அவர்களின் நிலை இன்னும் தெரியவில்லை என ஜொகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.








