Jun 23, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் வழிபாட்டுத் தலங்களுக்கான உயரக் கட்டுப்பாடு நிபந்தனை நீக்கம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் வழிபாட்டுத் தலங்களுக்கான உயரக் கட்டுப்பாடு நிபந்தனை நீக்கம்

Share:

சிலாங்கூர் மாநில அரசு, இஸ்லாம அல்லாத மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய திட்டமிடல் வழிகாட்டுதல்களில் அதிரடி திருத்தங்களைச் செய்துள்ளது. இதன்படி, இஸ்லாம் அல்லாத பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டட உயரக் கட்டுப்பாடு மீதான நிபந்தனையை சிலாங்கூர் அரசு முற்றாக நீக்கியுள்ளது.

மலேசிய திருச்சபைகளின் மன்றமான சி.சி.எம். வெளியிட்ட அறிக்கையின்படி, சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, வணிக, தொழிற்துறை மற்றும் நிறுவன நிலங்களிலும் வழிபாட்டுத் தலங்களைக் கட்ட இனி அனுமதி வழங்கப்படும்.

மேலும், குறைந்தது 5 ஆயிரம் குடியிருப்பாளர்களைக் கொண்ட புதிய மேம்பாட்டுத் திட்டங்களில், பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு மேம்பாட்டாளர்கள் குறைந்தது 1.5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும். அதோடு, அடிப்படை உள்கட்டமைப்புகளான நீர் மற்றும் மின்சார வசதிகளையும் அவர்கள் செய்து தர வேண்டும்.

இந்த புதிய திருத்தத்தின்படி பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்கள், வரும் ஜூலை மத்திய பகுதியிலிருந்து சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளன.

Related News