சன்வே லகூன் தீம் பார்க், தனது புகழ்பெற்ற 'ஸ்க்ரீம் பார்க்' ஈர்ப்பை புதிய உள்ளூர் மற்றும் அனைத்துலக கதைகளுடன் அதிகாரப்பூர்வமாக மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. 'விசிட் மலேசியா 2026' சுற்றுலா ஆண்டை முன்னிட்டு மேம்படுத்தப்பட்டுள்ள இந்த ஈர்ப்பில், ஹந்து ஹண்டர்ஸ், ஹாரர்வுட் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ் ஆகிய மூன்று விறுவிறுப்பான அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன.
இது குறித்துப் பேசிய சடன் இம்பேக்ட்! எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரும் உலகளாவிய புத்தாக்க இயக்குநருமான லிண்டன் வி. ஹாரிஸ், "ஸ்க்ரீம் பார்க் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இது பருவகால 'நைட்ஸ் ஆஃப் ஃபிரைட்” போன்ற கொடூரமான பயமுறுத்தல் பூங்கா அல்ல, பார்வையாளர்கள் பயந்து நடுங்குவதற்குப் பதிலாக குடும்பத்தோடு சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்," என்று விவரித்துள்ளார். மேலும், அனைத்துலக சுற்றுலாப் பயணிகளுக்கு மலேசிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில், 'ஹந்து ஹண்டர்ஸ்' பிரிவில் தொயோல், லாங்சுயிர், ஒராங் மின்யாக் மற்றும் காலா போன்ற உள்ளூர் நாட்டுப்புற பேய் கதைகளை இணைத்துள்ளதாக அவர் கூறினார்.
அதேபோல் "தி விஸார்ட் ஆஃப் ஆஸ்” நாவலின் இருண்ட பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, கேன்சாஸ் பண்ணை வீடு மற்றும் எமரால்டு சிட்டி போன்ற பகுதிகள் மிக நுணுக்கமான வடிவமைப்புடன் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை தவிர பள்ளி மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இந்த பூங்கா செயல்படும் என்று லிண்டன் வி. ஹாரிஸ் கூறினார்.








