கோலாலம்பூர், ஆகஸ்ட்.14-
முன்னாள் பொருளாதார அமைச்சரும், பண்டான் எம்.பி.யுமான ரஃபிஸி ரம்லியின் 12 வயது மகன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பெரிக்காத்தான் நேஷனல் கண்டனம் தெரிவித்துள்ளது. புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியின் கார் நிறுத்தும் இடத்தில் நேற்று நிகழ்ந்த இந்தத் தாக்குதல் சம்பவம், மலேசிய ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அச்சுறுத்தலாகும் என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்றக் கொறடாவான தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
ரஃபிஸி மகன் மீது ஊசி மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அறவே ஏற்றுக் கொள்ள முடியாததாகும். குறிப்பிட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளும்படி தமக்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் எச்சரிக்கையாகும் என்று ரஃபிஸி ரம்லி கூறியதையும் பெரிக்காத்தான் நேஷனல் கருத்தில் கொள்வதாக தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டார்.
இது உண்மையாக இருக்குமானால், நாட்டின் ஜனநாயக அமைப்பு முறைக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் குண்டர் அரசியலின் தொல்லைகள் தலைத்தூக்க தொடங்கியுள்ளன என்பதையே குறிக்கிறது என்று தக்கியுடின் ஹசான் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








