கோலாலம்பூர், ஜூலை.29-
சமூக ஊடகங்களைக் கையாளுவதற்கும், அவற்றில் கணக்கு வைத்திருப்பதற்கும் 13 வயதுக்குக் கீழ்பட்டவர்களுக்குத் தடை விதிக்கப்படலாம் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் கோடி காட்டியுள்ளார்.
இந்த உத்தேசப் பரிந்துரையை அரசாங்கம் தற்போது மிகக் கவனமாக ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
13 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் டிஜிட்டில் கல்வியறிவைக் கொண்டிருப்பர். இதன் மூலம் அவர்கள் ஏற்கனவே உள்ள தகவல்களின் சிக்கலானத் தன்மையை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்று அரசாங்கப் பேச்சாளரான டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
13 வயதுக்குக் கீழ்பட்ட மாணவர்களிடம் டிக் டாக் கணக்கு இருக்கின்றதா? என்றால் பலர், ஆம் என்றே பதில் கூறுவர்.
13 வயதுக்குக் கீழ்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருப்பது மிகப் பெரியத் தவறு என்பதை டிக் டாக் நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ளது.
எனவே இது குறித்து தொடர்புத்துறை அமைச்சு விரிவாக ஆராயும் அதே வேளையில், 13 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருக்க அனுமதியில்லை என்ற முடிவுக்கு அரசாங்கம் வரக்கூடும் என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.








