கோல திரங்கானு, டிசம்பர்.20-
ஓய்வு பெற்ற அரசாங்கம் ஊழியர் ஒருவர், தனது ஹஜ் யாத்திரைக்கான சேமிப்பு மற்றும் மனைவியின் சேமிப்பு நிதி உள்ளிட்ட 88 ஆயிரம் ரிங்கிட்டை தொலைபேசி மோசடி ஒன்றில் இழந்துள்ளார்.
கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி, 75 வயதான அந்த முதியவருக்கு, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்திலிருந்து அழைப்பதாக மோசடி தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாக கோல திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி முகமட் நோர் தெரிவித்துள்ளார்.
அத்தொலைப்பேசி அழைப்பில் பேசிய ஆடவர் ஒருவர், தான் ஒரு போலீஸ்காரர் என்று கூறிக் கொண்டு, சம்பந்தப்பட்டவருக்கு எதிராக மோசடிப் புகார்கள் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் பதற்றமடைந்த அந்த 75 வயது முதியவர், அந்த நபரை நம்பி 88 ஆயிரம் ரிங்கிட்டை அவர் கூறிய வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்துள்ளதாகவும் அஸ்லி முகமட் நோர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பணப் பரிமாற்றம் செய்த பின்னரே, இது ஒரு மோசடி வலை என்று அவருக்குத் தெரிய வந்துள்ளது.
இது போன்ற மோசடிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களை அஸ்லி முகமட் நோர் வலியுறுத்தியுள்ளார்.








