கெடா மாநிலத்தில் சூதாட்ட நிலையங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையில், சூதாட்டத்தை இஸ்லாமியர்கள் ஒருபோதும் ஆதரிப்பதில்லை என மலேசிய அங்கத்தான் மூடா கெஅடிலான், எ.எம்.கே வலியுறுத்தியுள்ளது.
எனினும், இந்த விவகாரத்தில் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி மாட் நோர் பயன்படுத்திய தரக்குறைவான வசைபாடுகளுக்கு எ.எம்.கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இத்தகைய பேச்சு பிரதமரை மட்டும் குறிவைப்பதல்ல; மலேசிய கூட்டரசு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பையும், நாட்டின் கூட்டரசு அரசியலமைப்பின் மாண்பையும் அவமதிப்பதாக எ.எம்.கே தேசிய துணைத் தலைவரும் சுங்கைப்பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.
மாநில மற்றும் கூட்டரசு அரசுகளின் அதிகார வரம்பு தொடர்பாக கூட்டரசு நீதிமன்றம் ஏற்கனவே இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காகவும், மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் நோக்கிலும் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமானால், சட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்; வசைபாடுகளாலும் அரசியல் நாடகங்களாலும் அல்ல என எ.எம்.கே சாடியுள்ளது.








