கோலாலம்பூர், டிசம்பர்.21-
சீனாவிலிருந்து கடந்த மாதம் வருகை தந்த Chen Xing - Xiao Yue ஆகிய புதிய பாண்டா ஜோடிகளைப் பொதுமக்கள் பார்வையிடும் காலம் நெருங்கி விட்டதை தேசிய விலங்கியல் பூங்காவான Zoo Negara தனது முகநூல் பக்கத்தில் சூசகமாக அறிவித்துள்ளது! பாண்டாவின் காதுகளையும் வாய் பகுதிகளையும் மட்டும் காட்டும் ஒரு சுவாரஸ்யமான காணொலியை வெளியிட்டு, "யார் என்று தெரிகிறதா?" என கேள்வி கேட்டு விலங்கு ஆர்வலர்களிடையே மட்டும் இன்றி, பள்ளி விடுமுறைக் காலத்தில் இருக்கும் சிறுவர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை Zoo Negara நிர்வாகம் தூண்டியுள்ளது.
கடந்த நவம்பர் 19 அன்று மலேசியாவை வந்தடைந்த இந்த அழகிய ஜோடி, கடந்த ஒரு மாத காலமாக கால்நடை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மலேசியா - சீனா இடையிலான நீண்டகால நட்புறவின் அடையாளமாக வழங்கப்பட்ட இந்த பாண்டாக்கள், விரைவில் பார்வையாளர்களைச் சந்திக்கத் தயாராக உள்ளன!








