கோலாலம்பூர், ஜூலை.17-
கடந்த வாரம் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்த கோலாலம்பூர் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவன் ஒருவன், தாம் தங்கியிருந்த செராஸில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் 26 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார்.
கடுமையானக் காயங்களுக்கு ஆளான அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே மரணமுற்றதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அய்டில் போல்ஹசான் தெரிவித்தார்.
செராஸ், தாமான் கோனோட்டில் அங்காசா கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவின்படி கடந்த ஜுலை 9 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிய வந்துள்ளது.
ஒரு மியன்மார் பிரஜையான அந்த மாணவன் இறப்பு குறித்து தகவல் கிடைத்து நேற்று கோலாலம்பூர் வந்து சேர்ந்த ஒரு வர்த்தகரான அந்த மாணவனின் தந்தை, துவாங்கு மூரிஸ் மருத்துவமனையின் சவக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள அந்த மாணவனின் சடலத்தை அடையாளம் காட்டினார்.
சவப் பரிசோதனைக்குப் பிறகு அந்த மாணவனின் உடல் வரும் ஜுலை 22 ஆம் தேதி மியன்மாருக்குக் கொண்டுச் செல்வற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








