கோலாலம்பூர், ஆகஸ்ட்.09-
தொலைக்காட்சி பிரபலம் கீதாஞ்சலி கணவரும், தொழில் அதிபருமான டத்தோஸ்ரீ ஞானராஜா தாக்கப்பட்ட சம்பவத்தில் அன்றைய தினம் அவர்களின் வீட்டில் நுழைந்த கும்பல் ஒன்று, சுமார் 3 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள நகைகளைக் கொள்ளையிட்டு சென்றுள்ளனர் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிஸாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா ஜாலான் காசிங்கில் உள்ள ஞானராஜா, கீதாஞ்சலி தம்பதியரின் பங்களா வீட்டில் காலையில் ஆயுதங்களுடன் நுழைந்த அடையாளம் தெரியாத அந்தக் கும்பல் நடத்திய கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அவர்களின் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பக்கத்து வீடுகளில் உள்ள ரகசிய கேமராக்கள் மூலம் ஆராயப்பட்டு வருவதாக ஏசிபி ஷாருல்நிஸாம் குறிப்பிட்டார்.
முகத்தில் காயத்திற்கு ஆளான ஞானராஜா செய்து கொண்ட போலீஸ் புகாரின்படி, அவர்களின் வீட்டின் பெட்டகத்திலிருந்து 3 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் உட்பட விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பினாங்கு முன்னாள் முதலமைச்சர் சம்பந்தப்பட்ட கடலடி சுரங்கப் பாதைத் திட்ட லஞ்ச ஊழல் வழக்கில் அரசு தரப்பின் முக்கிய சாட்சியான ஞானராஜா வீட்டில் கும்பல் நுழைந்தது திட்டவட்டமான கொள்ளைச் சம்பவமே தவிர இந்த கொள்ளைக்கும், ஞானராஜா முக்கிய சாட்சியாக விளங்கி வரும் நீதிமன்ற வழக்கிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று இதற்கு முன்பு ஏசிபி ஷாருல்நிஸாம் தெரிவித்து இருந்தார்.
எனினும் இந்தக் கும்பல் நடத்திய தாக்குதல் சம்பவம் கொள்ளைச் சம்பவ பாணியில் இல்லை என்றும், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்றும் ஞானராஜா – கீதாஞ்சலி தம்பதியர் கோரியுள்ளனர்.








